×

உபி.யில் சட்ட விரோதமாக சுரங்கங்கள் தோண்டி கனிமங்களை திருடுகிறாரா பிரிஜ் பூஷன்? : விசாரணை நடத்த குழு நியமனம்

புதுடெல்லி: பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி வழக்கை எதிர்கொண்டு வரும் பாஜ எம்.பி பிரிஜ் பூஷன் சிங், சட்டவிரோதமாக சுரங்கம் தோண்டி கனிமங்களை வெட்டியெடுத்து கடத்துவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மை நிலையை ஆய்வு செய்து அதற்கான நடவடிக்கை எடுக்க உயர்மட்ட குழு ஒன்றை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. பாஜ கட்சியை சேர்ந்த எம்பியான பிரிஜ் பூஷன் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக நீண்டகாலம் இருந்துள்ளார். அவருக்கு எதிராக ஒலிம்பிக் உள்ளிட்ட முக்கிய போட்டிகளில் இந்தியாவுக்காக பதக்கம் வென்ற வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி அதிர வைத்தனர். இது தொடர்பான வழக்கை சிங் எதிர்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், சிங்கிற்கு எதிராக மற்றுமொரு வழக்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில தொடரப்பட்டுள்ளது. அதில், பிரிஜ் பூஷன் சிங், உத்தரபிரதேச மாநிலத்தின் கொண்டா மாவட்த்தில் உள்ள தர்ப்கஞ்ச் தாலுகாவின் மஜரத், ஜெய்த்பூர் மற்றும் நவாப்கஞ்ச் கிராமங்களில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் அமைத்து கனிமங்களை வெட்டியெடுத்து விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சுரங்கங்களிலிருந்து தினசரி 700-க்கும் அதிகமான லாரிகள் மூலம் பிரித்தெடுக்கப்பட்ட சிறு கனிமங்களை சட்டவிரோதமாக கொண்டு சென்ற விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, அதிக பாரம் ஏற்றப்பட்ட லாரிகளால் பத்பர்கஞ்ச் பாலம் மற்றும் சாலைகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. எனவே, இதனை தடுக்க தேவையான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி அருண் குமார் தியாகி, பிரச்னையை கண்டறிய உயர்மட்டக்குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.

அவரது அந்த உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் என்பது சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது குறித்து குறிப்பிடுகிறது. எனவே, இதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறோம். இதற்காக மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மை குறித்து ஆராய கூட்டுக்குழு ஒன்று அமைக்க உத்தரவிடப்படுகிறது. இந்தக்குழு ஒரு வாரத்திற்குள் கூடி, புகாருக்குள்ளான இடத்தை நேரில் பார்வையிட்டு மனுதாரர் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின்போது மனுதாரரையும் இணைத்துக்கொண்டு உண்மை நிலையைச் சரிபார்க்க குழுவுக்கு உத்தரவிடப்படுகிறது.

அதோடு, மணல் சுரங்க மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்கள்-2016 மற்றும் மணல் அகழ்விற்கான அமலாக்க மற்றும் கண்காணிப்பு வழிகாட்டுதல்கள்-2020 ஆகியவை பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதை குழு ஆராய வேண்டும். இதில் வெட்டியெடுக்கப்பட்ட பகுதிகளின் மறுசீரமைப்பு மற்றும் சரயு நதிக்கு இதனால் ஏற்படும் சேதம் குறித்தும் மதிப்பிட வேண்டும்.குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை மற்றும் சேதத்தை சீரமைப்பதற்கான தீர்வு உள்ளிட்டவற்றை இரண்டு மாதங்களில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். இந்த மனுவின் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

The post உபி.யில் சட்ட விரோதமாக சுரங்கங்கள் தோண்டி கனிமங்களை திருடுகிறாரா பிரிஜ் பூஷன்? : விசாரணை நடத்த குழு நியமனம் appeared first on Dinakaran.

Tags : Brij Bhushan ,New Delhi ,BJP ,Brij Bhushan Singh ,UP ,Dinakaran ,
× RELATED ஆர்எல்டி பிரமுகர் கட்சிக்கு முழுக்கு